Pages

Tuesday, May 21, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 14

 
121. கே: எவன் ஜீவித்திருப்பவனாக கருதப்படுவான்?
புண்ணிய கர்மாக்களை செய்வதால் ஒருவனுடைய புகழ் பூமியிலும் தேவ லோகத்திலும் வியாபிக்கின்றது. எவ்வளவு நாள் வரை ஒருவனுடைய புகழ் நிலைத்திருக்கின்றதோ அவ்வளவு நாள் வரை அவன் ஜீவித்து இருப்பதாக கருதப்படுகிறான். அவனே புருஷன் என்றும் கூறப்படுவான்.

122. கே: எல்லாப்பொருள்களையும் பெற்று எல்லாக் காமங்களையும் அடைந்தவன் எவன்?
: ப்ரும்ஹ சாக்ஷாத்காரம் செய்தவனே எல்லாப்பொருள்களையும் பெற்று எல்லாக் காமங்களையும் அனுபவிப்பவன் ஆவான். அவன் சுகம் துக்கம், பிரியம், அப்பிரியம், சென்றது வரப்போவது, எல்லாவற்றையும் சமமாக கருதுவான்.

இவ்வளவு கேள்விகளுக்கும் சரியான பதிலை உரைத்த தருமபுத்திரரை மெச்சி, இவனுக்கு தர்மத்தின் அறிவு பூரணமாக இருக்கின்றது; தர்மத்தில் இவன் சொந்த நிலை எவ்வாறு இருக்கிறது என்று பரீக்ஷிக்க வேண்டும் எனக்கருதி , “ இங்கு இறந்து கிடக்கும் உன் சகோதரர் நால்வருள் நீ யாரை விரும்புகிறாயோ, அவன் இப்போது பிழைப்பான். யாரை நீ விரும்புகிறாய்? என அந்த யக்ஷன் தர்மபுத்திரரை நோக்கி வினவினான்.
தருமன் : இதோ கருத்த உடலுடனும், சிவந்த கண்களுடனும், விரிந்த மார்புடனும், நீண்ட கைகளுடனும் கிடக்கிறானோ அந்த நகுலன் பிழைத்தெழுந்திருக்கட்டும்.
யக்ஷன் : பதினாயிரம் யானை பலமுள்ள பீமனையும் நிகரற்ற வில்லாளியுமான அர்ஜுனனையும் விட்டு உன் சிறிய தாயின் மகனான நகுலன் பிழைக்கட்டும் என்று நீ கூறுவதன் காரணம் யாது?
தருமன் : மற்ற எல்லா தருமங்களையும்விட தயையுடன் அனைவரையும் சமமாக பாவித்தல் என்பதே சிறந்த தர்மமாகும். தர்மத்தை நாம் அழித்தால் அதாவது சரியாக அனுஷ்டிக்காவிட்டால் அது நம்மை அழித்துவிடும். தர்மத்தை நாம் இரக்ஷித்தால் அது நம்மை கட்டாயம் இரக்ஷிக்கும். ஆதலால் தர்மத்தை நான் ஒரு பொழுதும் கைவிடுவதில்லை. ஆதலால் என் தாயாராகிய குந்தியின் பிள்ளைகளுள் நான் ஒருவன் பிழைத்திருக்கிறேன். மாத்ரியின் பிள்ளைகளுள் ஒருவன் பிழைத்தால் குந்தீ -மாத்ரீ இருவரும் பிள்ளைகள் உள்ளவர்களாக ஆவர். நான் குந்தீ -மாத்ரீ இருவரையும் சமமாக பாவிப்பவன். ஒருவளுடைய பிள்ளை மட்டும் பிழைத்திருந்து மற்றவளுக்கு பிள்ளை இல்லாமல் இருக்க நான் சகிக்கமாட்டேன்.
யக்ஷன் : இவ்வாறு உன் மனம் தர்மநெறி தவறாமல் இருப்பதைக்கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆதலால் உன் சகோதரர்கள் அனைவருமே பிழைத்து எழுந்திருக்கட்டும்.

உடனே பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்ற நால்வரும் தூக்கத்தில் இருந்து விழித்தெழுவதைப்போல எழுந்திருந்து பசி தாகம் அற்றவர்களாக முகமலர்ச்சியுடன் காக்ஷியளித்தனர்.

நிறைவுற்றது.

No comments: