Pages

Saturday, May 11, 2013

ரமணர் - சுகம்


சென்றபதிவின் தொடர்ச்சி...
"பகவானின் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றுதானே எங்களெண்ணம்" என்றார் ஒரு பக்தர்.

"ஆமாம் ஓய்! ஆனால் சுகமென்றால் எது சுகம்? சாப்பிடுவதில்தானா சுகம் இருக்கிறது? ஒரு மஹாராஜா இருக்கிறார். தினசரி பஞ்சபக்ஷ பரமான்னம் தயாராக இருக்கிறது. ஆனால் அவனுக்கு எப்போதும் வியாதிதான். ஒரே அஜீர்ணம். வாய்க்கு சரியில்லை. சாப்பிட்டாலும் ஜெரிக்காது. வயிற்று வலி தூக்கம் வராது. கட்டில் மெத்தை இது எல்லாம் இருந்து என்ன லாபம்? எப்போதும் நோய் கவலை. அந்த ராஜாவைவிட கூலிக்காரனே சுகி! கிடைத்த கஞ்சியோ கூழோ குடித்து கவலை இல்லாமல் தூங்குகிறான். வியர்வை நிலத்தில் விழ உழைக்கிறான். அதனால் கபகப என்று பசி எடுக்கிறது. அந்தப்பசியில் அந்த கூழும் அமிர்தம் போலிருக்கும். அடுத்த நாளைக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்ற நினைப்பில்லையாகையால் கவலை இல்லை. எந்த மரத்தின் அடியிலாவது படுத்து ஹாய்யாக தூங்குகிறான். ” என்றார் பகவான்.

ஆனால் அவன் தான் சுகி என்பதை உணரமாட்டான் இல்லையா? என்றார் அந்த பக்தர்.

"அதுதான் வினோதம். உலகத்தின் மாயை என்ன வென்றால் மரத்தினடியில் படுத்துக்கிடப்பவன் அந்த மாடமாளிகையை பார்த்து 'ஐயோ நமக்கு அந்த சுகம் இல்லையே!' என்று கவலைப்படுகிறான். ஆனால் உண்மையான சுகி அவன்தான். ஒரு தடவை கூலியாள் ஒருவனைப்பார்த்தேன். இந்த வட்டாரத்திலேயே மண்வெட்டி ரோடில் போட்டுக்கொண்டிருந்தான். இந்த உழைப்பில் நன்றாக களைத்துப்போனான். பசியெடுத்தது. குளத்தில் கை, கால், முகமெல்லாம் அலம்பிக்கொண்டு கற்பாறை மீது உட்கார்ந்து ஒரு சின்ன மூட்டையை அவிழ்த்தான். அது நிறைய களி இருந்தது. அதற்கு மேலே சாம்பாரோ என்னவோ கொஞ்சம் விட்டிருந்தது. அவ்வளவுதான். களி மூன்று கவளங்களோ என்னமோதான் இருந்தது. திருப்தியாக சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு கையை தலையின் கீழ் வைத்துக்கொண்டு குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்துவிட்டான். 'ஆஹா, நீதாண்டா சுகி!' என்று நினைத்துக்கொண்டேன். எதை சாப்பிட்டு அவனுக்கு இந்த சுகம் வந்தது என்கிறீர்கள்? உயிர் வாழ்வதற்கு தேவையானதை சாப்பிட்டால் எதுவும் வலுதான். தின்பதற்காக வாழ்வது என்றால் சரீரம் பாழாகிவிடும்.” என்றார் பகவான்.

"உண்மைதான். மஹாராஜாவாக இருந்தால் சக்ரவர்த்தி ஆகவேண்டும் என்றும் சக்கிரவர்த்தியாக இருந்தால் தேவேந்திரப்பதவி இல்லையே என்றும் கவலை இருக்குமே ஒழிய நம்மை விட அந்த கூலிக்காரனே தேவலை என்று தோன்றாதல்லவா?”

"ஆமாம். அதுதான் மாயை. அந்த நினைப்பு ஏற்பட்டால் நிச்சயம் கடை தேறுவார்கள். அதையும் இதையும் அனுபவித்து இருப்பதால் எனக்கு அந்த சுகத்தின் அருமை தெரிகிறது. விரூபாக்ஷ குகையில் இருந்த போது யாராவது எதாவது கொண்டு வந்து கொடுத்தால் கொஞ்சம் சாப்பிட்டு அங்கே மண் மேடையில் துணி கூட விரித்துக்கொள்ளாமல் படுத்துக்கொண்ட நாட்களில் கிடைத்த சுகம், இப்போது இந்தச் சாப்பாடு, கட்டில், மெத்தை, திண்டு இவைகளில் கொஞ்சம் கூட காணோம். இவையெல்லாம் மந்தம்தான்.” என்றார் பகவான்.
 

No comments: