Pages

Wednesday, May 15, 2013

ரமணர் - குருவி கதை

 
அது என்ன கதை என்று ஒரு பக்தர் கேட்டார்......

"என்னவா? ஒரு குருவி தன் முட்டையை மூக்கில் கொத்திக்கொண்டு பறந்து கொண்டிருந்தபோது முட்டை நழுவி சமுத்திரத்தில் விழுந்துவிட்டது. அதை வெளியிலெடுத்துவிடலாம் என்று குருவி பதைபதைத்தது. சமுத்திரத்தில் மூழ்கி மூழ்கி அலகினால் நீரை உறிஞ்சுவதும் அதை கரையில் வந்து கொட்டுவதும், நனைந்த தன் இறக்கைகளை விசிறிக்கொள்வதுமாய் இருந்தது. நாரதர் அந்த பக்கமாக போய்க்கொண்டு இருந்தவர் குருவி செய்வதைப்பார்த்து என்ன விஷயம் என்று கேட்டுத்தெரிந்து கொண்டார். 'பைத்தியக்கார குருவியே இது உன்னால் முடிகிற காரியமா?'என்று கேட்டார்.

'முடியுமா முடியாதா என்கிற கவலை எனக்கில்லை. விடாப்பிடியாக முயன்றால் மேலே கடவுள் இருக்கிறார்' என்றது குருவி. நாரதர் அதன் நம்பிக்கையை கண்டு ஆனந்தித்து, கருடனிடம் சென்று நடந்ததை எல்லாம் சொல்லி 'உன் ஜாதியைச் சேர்ந்த ஒரு ஜந்து இத்தனை சிரத்தையுடன் முயன்று கொண்டு இருக்கிறதே! நீ சும்மா இருப்பது தர்மமா? உதவக்கூடாதா?' என்று கேட்டார்
 
கருடன் அதைக்கேட்டுப் பறந்தோடி வந்து தன் இரண்டு இறக்கைகளாலும் ஒரு முறை வீசியதும் சமுத்திர ஜலமெல்லாம் இரண்டாகப்பிரிந்து முட்டை தென்பட்டது. குருவி அதை அலகில் கொத்திக்கொண்டு பறந்து போய்விட்டது.

அதே விதமாக ஆன்மீகச்சிந்தனை உள்ளவர்களும் ஸத் காரியத்தில் ஈடு பட்டிருப்பவர்களும் 'இது பெரிய காரியமாயிற்றே! உதவுபவர்கள் எவரும் இல்லையே' என்று யோசிக்காமல் சிரத்தையுடன் பாடுபட்டால் ஈசன் துணை தானே வரும். குருவி மூக்கால் உறிஞ்சி வெளியே கொட்டி சமுத்ர ஜலம் குறையுமா? குறையாது. ஆனாலும் என்ன அது சிரத்தையோடும் விடா முயற்சியோடும் தன் வேலையை செய்து கொண்டு இருந்தது. அப்படியே ஒருவர் முயற்சி செய்து கொண்டு வந்தால் எப்போதாவது பலன் கிடைக்காமல் போகாது. எல்லாவற்றுக்கும் சிரத்தைதான் முக்கியம். ஸத் காரியங்களில் ஈடுபடுபவர்கள் சிரத்தையுடன் காரியம் செய்தால் கருடன் உதவி போல ஈசன் துணையும் வரும். அது வரும் வரையில் நம்பிக்கையுடன் முழு மூச்சுடன் காரியம் செய்ய வேண்டும்” என்று உபதேசித்தார் பகவான்.

No comments: