Pages

Tuesday, May 28, 2013

ரமணர் - தோசை


ஆச்ரமத்தின் பக்கத்தில் இருந்த த்ரௌபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த நாள் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஆச்ரமத்துக்கும் ஏராளமான பக்ஷணங்களுடன் வந்து சேர்ந்தனர். பகவான் அனுமதியுடன் அவை அங்கிருந்த பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

அப்போது கிழவி ஒருத்தி ஒரு கழியை ஊன்றியபடி உள்ளே வந்தாள். அவள் கையில் ஆலிலைகளால் தைத்த ஒரு தொன்னை இருந்தது. அதில் 2-3 தோசைகள் இருந்தன. அவள் சர்வ ஸ்வதந்திரமாக பகவானிடம் சென்று, “இதோ இந்த தோசையை சாப்பிடு சாமி. வேற ஒண்ணும் கொண்டுவர முடியலை. என்ன செய்வது?” என்று சொல்லிக்கொண்டு அவர் கையிலேயே கொடுக்கப்போனாள். அங்குள்ளவர்கள் குறுக்கிட்டு "அங்கே பக்கத்திலேயே வையுங்கம்மா” என்றார்கள்.

அவள் கோபத்துடன், “இருங்கைய்யா, ரொம்பவும் சொல்ல வந்துட்டீங்க! நேத்து முந்தா நேத்து வந்தவங்க நீங்க! உங்களுக்கு என்ன தெரியும்? அந்தக்காலத்திலேயே இங்கே திண்ணை கட்டி அதிலே சாமியை உக்கார வெச்சது நான்தானே? என்னை என்னமோ கிட்டே போகக்கூடாது என்கறீங்க! போதும் போதும்” என்று அதட்டி பேசினாள்.
எல்லோரும் வியப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

பகவான் பணிவிடையாளர்களை தடுத்து அவளிடமிருந்து தொன்னையை வாங்கிக்கொண்டு "பாட்டி! அவர்கள் விவரம் தெரியாத குழந்தைகள். நீ ஒண்ணும் மனசில போட்டுக்காதே! இந்த தோசையை எந்த மாவிலே செய்தாய்? இப்போ உன் அண்ணா பசங்க யாரும் உன்னை சரியா பாத்துக்கிறதில்லையாமே? எப்படி ஜீவனம் நடக்கறது? வண்டியில வந்தாயா, நடந்து வந்தாயா? ” என்றெல்லாம் விசாரித்தார். பின் பணிவிடையாளர்களிடம் "இந்த பக்ஷணங்களை எல்லோருக்கும் பங்கு போட்டு கொடுத்து நீங்களும் சாப்பிடுங்கள். நான் இந்த தோசைகளை சாப்பிடுகிறேன்” என்று அமுதுண்பது போல சாப்பிட ஆரம்பித்தார்.
அந்ந்தக்கிழவி அளவற்ற சந்தோஷத்துடன் பூரித்துப்போய் உட்க்கார்ந்திருந்தாள். பகவான் பக்ஷணங்களையும் கொண்டு வரச்சொல்லி துளித்துளி எடுத்துக்கொண்டு "எனக்கு அந்த தோசைகளே போதும்” என்றார்.

கிழவி எழுந்து நின்று "சாமி, என்னை யாரானா பாத்துகிட்டா என்ன, பாத்துக்கலைன்னா என்ன? உங்க கருணையாலே நான் தோசை சுட்டு வித்து பிழைச்சுக்கிறேன். என் காலம் இப்படியே கழிஞ்சால் போதும்” என்று கூறி நமஸ்கரித்து, பிரசாதம் பெற்றுப்போனாள்.

அவள் சென்ற பிறகு பணியாளர்கள் பகவானைப்பார்த்து "பக்ஷணங்களை விலக்கி விட்டு அந்த அரைவேக்காட்டு தோசையை சாப்பிட வேணுமா பகவான்? அதை யாருக்காவது கொடுத்துவிட்டு பக்ஷணங்களை சாப்பிடக்கூடாதா?” என்றார்கள்.

"ஓஹோ! இதைவிட அதெல்லாம் இன்னும் ருசியாக இருக்குமோ? வேணுமென்றால் நீங்கள் அதை எல்லாம் சாப்பிடுங்கள். எனக்கு இது போதும்.” என்றார் பகவான். அதன்பின் பணிவிடையாளர்கள் ஏதும் பேசவில்லை.

பகவான் என்னைப்பார்த்து (சூரி நாகம்மா) “பாவம் அந்த கிழவி என்ன செய்வாள்? தன்னிடம் என்னெ இருந்ததோ அதைக்கொண்டு வந்தாள். நான் மலை மீது இருந்த காலத்திலேயே தன்கணவனுடன் வருவாள். எனக்கு ஏதாவது சாப்பிட கொண்டு வருவாள். கணவன் போன பிறகு தன் அண்ணாவோடு இருந்தாள். அவனும் போய்விட்டான். அதன் பின் அண்ணா பிள்ளைகள் சரிவர பார்த்துக்கொள்ளாமல் துரத்திவிட்டனர். எங்கேயோ இருந்து கொண்டு தோசை விற்று ஜீவனம் செய்து கொண்டு இருக்கிறாள். முதன் முதலில் அம்மாவின் சமாதி அருகே நான் உட்கார திண்ணை கட்டி தென்னை ஓலையினால் கூரை போட்டுக்கொடுத்தது இவள்தான். அது வரை மரத்தடியிலேயே உட்கார்ந்து இருந்தேன். 'ஐயோ பாவம் சாமி, கீழே உக்காந்திருக்காரே, வெய்யில்லே உக்காந்திருக்காரே' என்று திண்ணை கட்டிக்கொடுத்தாள். இப்போது திரௌபதி அம்மன் கோவிலை புணருத்தாரணம் செய்தது இவள் அண்ணா பிள்ளைதான். இப்போது இவளுக்கு வயதாகிவிட்டதால் அடிக்கடி இங்கே வருவதில்லை. கோலை ஊன்றிக்கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாளோ!” என்றார்.
தோசைகளில் ஒரு துளிக்கூட மிச்சமில்லாமல் சாப்பிட்டு முடித்தார் பகவான்.

 

No comments: