Pages

Thursday, May 9, 2013

துளஸீ சரிதம் - பகுதி 1

 

பெண் மக்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழவும்; செல்வம், புத்ரன் முதலிய பாக்கியங்களை பெறவும் பிரதி தினம் துளசீ பூஜை செய்ய வேண்டும் செடி வடிவமாக துளசீ காணப்படினும் அவள் க்ருஷணனுக்கு அந்தரங்க விஸ்வாசமுள்ள தேவதை. அவளது சரிதம் தேவீ பாகவதத்தில் விரிவாக வர்ணிக்கப்படுகிறது. அதையும் அவள் பூஜையையும் பார்க்கலாம்.

துளசீ என்பவள் கோலோகத்தில் க்ருஷ்ணனுக்கு மிக ப்ரியமான ஒரு உத்தம கோபியாவாள். அவள் கண்ணனிடம் பேரன்பு பூண்டு மெய்மறந்து அருகில் வருபவரையும் கவனியாமல் பகவானோடு ரமித்தாள். இதைக்கண்டு கோபம் கொண்ட ராதை அவளைப் பூமியில் ஒரு பெண்ணாக பிறக்கும்படிச் சபித்தாள். ஆதலால் அவள் அவனியில் தர்மத்வஜன் என்ற அரசனுக்கு மாதவி எனும் மனைவியிடம் பெண்ணாகப்பிறந்தாள். அவள் கோலோக கோபிகையாதலால் ஒப்பற்றவள் என்ற கருத்தைத்தரும் துளசீ என்ற பெயர் இடப்பட்டது.

தந்தையிடம் அருமையாக வளர்ந்த துளசீ மஹா விஷ்ணுவே தனக்கு புருஷனாக வர வேண்டும் என்று விரும்பினாள். தந்தையிடம் உத்திரவு பெற்று தவக்கோலங் கொண்டு கடுந்தவம் புரிந்தாள். பகவான் அவள் எதிரில் தோன்றி இப்பிறவியில் என் அம்சமான நான்கு கைகள் உள்ள சங்கசூடனை மணந்து கொள். தக்க சமயத்தில் யான் உன்னை ஏற்கிறேன் என்றார். க்ருஷ்ணனுடைய சரீரத்தில் இருந்து தோன்றிய ஸுதர்மன் ஒரு சமயம் துளசீ மீது மோகம் கொண்டான். ராதை அவனை ராக்ஷஸனாகும்படி சபித்தாள். அவனே சங்கசூடன் என்ற அரக்கனாக தோன்றினான். அவனுக்கும் துளசிக்கும் தான் யார், எதனால் இந்த பிறவி கிடைத்தது என்ற நினைவிருந்தது. ப்ரம்மாவின் உத்திரவு படி இருவரும் மணந்து கொண்டனர்.
அரக்க குலத்தில் பிறந்த சங்கசூடன் தன் ஜாதிக்கு ஏற்றபடி பல அநீதிகளை செய்தான். மிக்க பலம் கொண்டவன். ஆதலால் இந்திராதி தேவர்களை போருக்கு அழைத்து வெற்றி பெற்றான். அமரர் அனைவரும் ஒன்று கூடி பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். அவர் சிவனிடமும் விஷ்ணுவிடமும் சென்று இதைத் தெரிவித்தார்.

த்ரிமூர்த்திகளுக்கும் சங்கசூடனுக்கும் இடையே போர் நடந்தது. அவன் கழுத்தில் இருக்கும் க்ருஷ்ண கவசம் இருக்கும் வரை அவனை போரில் கொல்லச் சிவனாலும் முடியாதென உணர்ந்தனர். விஷ்ணு ப்ராம்ஹண வேடம் தரித்து அவனிடம் சென்று அதை யாசித்து பெற்றார். அவன் அதனைத் தந்தும் இறக்கவில்லை. அவனை ஜயிக்கவும் முடியவில்லை. மறுபடி மாலும் சிவனும் யோசித்து அவன் மனைவி துளசி கற்புள்ள வரை அவனை கொல்ல முடியாதெனக் கண்டனர். விஷ்ணு அவள் புருஷன் போல் உருவெடுத்து அவளிடம் சென்றார். தன் பதி என்றே நினைத்து ஸதி அவருடன் இருந்து தன் கற்பை இழந்தாள். சங்கு சக்ர கதா பாணியாக இருக்கும் பகவானைக் கண்டாள். அகமகிழ்ந்து அவரை அடைய அந்த உடலை விட்டாள். பகவானது மார்பில் லக்ஷ்மியாக அமர்ந்தாள். அவள் உடலானது கண்டகீ என்ற நதியாக தோன்றியது. அதில் பகவான் சாளக்ராமம் என்ற சிலா உருவெடுத்து அவளுக்கு இன்பமளித்தார். அவளது கேசம் துளஸிச்செடியாக மாறியது. அதை மாலையாக்கி துளசி தாம பூஷணன் ஆனார்.
(அடுத்த வாரத்தில் இதன் அடுத்த பகுதிகள் வெளியாகும்) 

No comments: