Pages

Monday, April 21, 2014

ந மம....


ந மம.... என்னுடையதில்லை. இந்த கான்சப்ட் ல சமீபத்து மின்னஞ்சல் ஒண்ணும் சில நாட்கள் முன்னும் இன்றும் கேட்ட உபன்யாசமும். ரைட் அப்ப ஒரு பதிவு தேத்தியாச்சு.

முதலில் கீதை
कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः।
जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्॥५१॥

கர்மஜம் பு³த்³தி⁴யுக்தா ஹி ப²லம் த்யக்த்வா மநீஷிண:|
ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: பத³ம் க³ச்ச²ந்த்யநாமயம் ||2-51||

ஹி பு³த்³தி⁴யுக்தா மநீஷிண: = ஏனெனில் புத்தியுடைய மேதாவிகள்
ப²லம் த்யக்த்வா = பயனைத் துறந்து
ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: = பிறவித் தளை நீக்கி
அநாமயம் பத³ம் க³ச்ச²ந்தி = மாறுதலற்ற பரமபதத்தை அடைகிறார்கள்
புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி, ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.

சுட்டு இருக்கேன்... இவருக்கு நன்றி

இது சாங்க்ய யோகத்தில் 51 ஆவது ஸ்லோகம்.
அடுத்து கர்ம யோகத்துக்கு போகப்போகிறார். அதுக்கு இது ப்ரிலூட்!

ஒரு வேலையும் செய்யாம நாம இருக்க முடியாது. அது யோகம் பயின்ற சிலருக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே சாத்தியம். அதனால என்ன செய்யலாம். வேலை செய்தால் அதில் ஒரு ஆசை வந்து விடுகிறது. முக்கியமா அதன் பலனைப்பத்தி. இதை செய்யறதால எனக்கு என்ன கிடைக்கும்?
அந்த ஆசை வந்துட்டா இது இந்த பலனை இப்படி தரணும்ன்னும் ஒரு ஆசை வந்துடும். ஆசை சீக்கிரமே ஆன்சைட்டியை கொடுக்கும்! (ஒண்ணுமில்லை, ஒரு எதுகை மோனைக்காக இங்க்லீஷ்!) இது நடக்குமோ நடக்காதோ விரும்பியபடி பலன் கிடைக்குமோ கிடைக்காதோ ந்னு மனசு அலை பாய ஆரம்பிச்சா நம் நிம்மதி காணாமல் போயிடும்.

ஒரு ராஜா இருந்தான். அவன் ராஜ்யத்துல ‘கொஞ்சம் நிறைய’ பிரச்சினை. தினசரி நிறைய பிரச்சினைகள் அவன்கிட்ட சொல்லப்படும். அவனும் கேட்டு அதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை தகுந்த ஆட்கள்கிட்ட சொல்லி செயலாற்றுவான். இந்த ‘கொஞ்சம் நிறைய’ பிரச்சினை  ‘நிறைய நிறைய’ பிரச்சினை ஆனதும் அவனால தாங்க முடியலை. என்னடா செய்யறதுன்னு யோசிச்சான். அப்ப பக்கத்துல காட்டுல ஒரு சன்யாசி இருக்கறதா கேள்விப்பட்டு அவரைப்போய் பார்த்தான். தன் பிரச்சினைகளை எல்லாம் சொன்னான். “ஸ்வாமி, ராத்தூக்கம் போயிடுத்து. கவலைகள் மனசை அரிச்சுகிட்டே இருக்கு. இதுல இருந்து மீள வழி சொல்லுங்க” ந்னு கேட்டுகொண்டான்.

அவரும் கொஞ்சம் யோசிச்சார்.  அப்புறம் “சரி, நான் பாத்துக்கறேன். ராஜ்யத்தை எனக்கு கொடுத்துடு!” ந்னு சொன்னார். அவனும்  ‘அப்பாடா விட்டது தொல்லை’ ன்னு நினைச்சு அப்பவே தாரை வார்த்து கொடுத்துவிட்டான்.  “போய்டு வரேன்” ந்னு நிம்மதியா கிளம்பினான்.

சன்யாசி  “கொஞ்சம் இருப்பா! எங்கே போறே?” ந்னு கேட்டார்.
“கால் போன போக்கிலே போவேன்!”
“போய் என்ன வேலை பார்ப்பாய்?”
“யார் என்ன வேலை கொடுக்கறாங்களோ அதை செய்வேன். கிடைச்சதை வெச்சுண்டு உயிர் வாழ்வேன்!”
“ரொம்ப சந்தோஷம்! நான் ஒரு வேலை தரேனே? செய்யறியா?”
“ஆஹா! நிச்சயமா!”
“இதோ பார். எங்கிட்ட ஒரு ராஜ்யம் இருக்கு. அதை நிர்வாகம் செய்ய எனக்கு அனுபவ இல்லை. உனக்கோ அதுல அனுபவம் உண்டு. செய்யறியா? பதிலுக்கு நீ அரண்மனையில வசிக்கலாம். வழக்கமா இது வரைக்கும் அனுபவிச்ச வசதிகளை அனுபவிக்கலாம். என்ன சொல்லறே?”
ராஜா என்ன சொல்வதுன்னு தெரியாமல் தலையை ஆட்டினான்.
“ஆனா எப்பவும் நினைவு வெச்சுக்கோ! நீ என் வேலையாள்தான்.”

தன் பிரச்சினை தீர்ந்ததா இல்லையான்னு புரியாமலே ராஜா அரண்மனைக்கு போய் சேர்ந்தான்.
ரெண்டு மாசம் கழிச்சு சன்யாசி அரண்மனைக்கு போனார்.
ராஜா வரவேற்று எல்லா உபசாரங்களையும் செய்தான்.
“என்னப்பா எப்படி இருக்கே?”
“பரம சௌக்கியம் ஸ்வாமி! நிம்மதியா தூங்கறேன்”
“பிரச்சினைகள் எல்லாம் இல்லாம இருக்கா?”
“இல்லை ஸ்வாமி, வழக்கமான பிரச்சினைகள் எல்லாமே அப்படியேத்தான் இருக்கு. தினசரி பிரச்சினைகளை சந்திக்கறதும் அதுக்கெல்லாம் தீர்வு காண்பதும் வழக்கம் போலவே இருக்கு. ஆனா இப்ப அதெல்லாம் மனசை பாதிக்கிறதில்லை.”
இப்படியே இருன்னு சொல்லிட்டு சன்யாசி காட்டுக்கு திரும்பிட்டார்.

எப்படி நிம்மதி வந்தது?
ராஜாவுக்கு “ராஜ்யம் என்னுது; ‘நான்’ தான் இதுக்கு தீர்வு காணமுடியும்” ந்னு ஒரு எண்ணம் இருந்தது. ராஜ்யம் தன்னோடது இல்லைன்னு ஆன பிறகு அவனால பற்றில்லாம அந்தந்த நேரத்துக்கு எதை செய்யணுமோ அதை செய்யும் பக்குவம் வந்தது.

இதுதான்  ‘ந மம’ கான்சப்ட். என்னுடையதில்லை........

 
Post a Comment