Pages

Saturday, April 5, 2014

சன்னியாசம்



யாரேனும் எதுவும் கேட்பதும் அதற்கான பதில் இன்னொரு இடத்தில டிஸ்கஸ் ஆகிறதும் புதுசு இல்லை. இன்றைக்கு நண்பர் ஒருவர் ஒரு பதிவு போட அதற்கு தொடர்பான விஷயமே இன்றைக்கு நான் கேட்ட நொச்சூர் வெங்கட்ராமனின் ப்ரவசனம்!

சன்னியாசம் என்கிறதே ஆச்சார்யாள் காலத்துக்கு அப்புறம் வந்து பிரபலமான தசநாமிகள் ஏற்பாடுதான். அதுக்கு முன்னே இப்படீ வானப்ரஸ்தம் இருக்கிறவர்கள் தபஸ்விகளாக இருந்து வைராக்கியம் வந்தால் அப்படியே கிளம்பிப்போகிறதுதான். ஆஸ்ரமம் என்று ஏற்படுத்திக்கொண்டு இருக்கறதில்லை. பாகவதத்திலேயே சொல்கிறது... சன்னியாசிக்கு ஆஸ்ரமமே கூட ஒரு பந்தம்தான். ஒரு லட்சியமே இல்லாமல் ஒரு ஆசையும் இல்லாமல் ஒரேயடியாக எல்லாத்தையும் விட்டுடறேன்னா, அப்படி நம்மால விட முடியாது! வாசனைகள் இருக்கிற வரைக்கும் அப்படி விடவும் முடியாது; விடப்பார்க்கிறது நல்லதும் அல்ல.
 எதுவும் பண்ணறதுக்கில்லைன்னா சோம்பேறியா போயிடுவான். சாப்பிடுகிறதும் தூங்குகிறதுமாக அப்படியே காலத்தை தள்ளிடுவான். என்ன வேணும்? ஞானத்தை புத்தியால தெரிந்து கொண்ட பிறகு அது அனுபவத்துக்கு வர உள்ளே வாசனைகள் எல்லாம் இல்லாம செய்யணும்.

 இதான் வாசனா க்‌ஷயம் என்கிறது. அது வர என்ன செய்யணும்? தத்வ ஞானத்துடன் இந்த உலகத்திலேயே செயல்படணும். செயல்படணும்ன்னா என்ன? சோஷியல் சர்வீஸ் செய்யணுமா? அப்படிக்கூட ஒண்ணுமில்லை. அது இன்னொரு பந்தமாகி விடும். யதேச்சையாக எந்த வேலையில் ஏற்கெனெவே நாம் இருக்கிறோமோ அந்த வேலையை அழகாக செய்தால் போதும். அப்படிப்பட்ட வேலை சோஷியல் சர்வீஸாக இருந்தால் சரியே. நாமாக அதை தேடிக்கொண்டு போக வேண்டாம். கடவுள் நம்மை எங்கே கொண்டு வைத்து இருக்கிறாரோ அங்கேயே நமக்கான வேலையை செய்து கொண்டு வரலாம். அது சமையல் கட்டு வேலையானால் கூட சரி, அதை அழகா செய்யறதே கர்மயோகம். நாம் இருக்கற கர்ம மண்டலத்திலேயே வேலையை செய்து கொண்டு அந்த வேலையில் உடம்பு ஈடு பட்டு கொண்டு இருக்கும்போதே, உள்ளுக்குள்ளே அதற்கான பலனில் கருத்தை வைக்காமல், விருப்பு வெறுப்பு எல்லாவற்றையும் நீக்கி, எது கிடைத்தாலும் சரி என்கிற மனோ பாவத்துடன் வேலையை ஈஶ்வர ஆராதனையா செய்ய பழகணும். கர்மாவை விட்டுவிடக்கூடாது! ஞானம் ஏதோ புத்திக்கு கொஞ்சம் அகப்பட்டதை ஞானமே கிடைத்துவிட்டதாக நினைத்து எல்லாவத்தையும் விட்டுவிடுகிறேன் என்று விட்டுவிடக்கூடாது. அப்படி சிலருக்கு நடக்கும்தான்.
பகவான் ரமணரிடம் ஒருவர் வந்து கேட்டார். ஸ்வாமி நான் எல்லாத்தையும் விட்டுவிட்டு சன்னியாசியாக போகட்டுமா?
ரமணர் சொன்னார்: ஏன்பா, உன் குடும்பத்தார் அப்படி என்ன துரோகம் செய்தார்கள்? நான் விட்டுவிடுகிறேன் என்று நினைப்பதே ஒரு பந்தம்தான். (யூ ஹாவ் நோ ரைட் டு ரினௌன்ஸ் ஆர் ரீடெய்ன். எவரி எபர்ட் இஸ் அ பாண்டேஜ்!) நமக்கு துறக்கவோ வைத்துக்கொள்ளவோ ஒரு உரிமை இருக்கிறதாக நினைப்பதே ஒரு பந்தம்தான். அதனால நான் யார்ன்னு பாரு? நான் க்ருஹஸ்தனா? இந்த சரீரம் க்ருஹஸ்தன்னு நினைச்சுக்கறதாலத்தானே அப்படி தோணுகிறது? க்ருஹஸ்தன் என்கிறது என்ன? ஒரு நினைப்புதானே? நாளை சன்னியாசியா ஆனால் ”நான் சன்னியாசி, நான் சன்னியாசி” என்று நினைத்துக்கொண்டு இருப்பாய்! அப்போதும் சரீர அபிமானம், நான் என்கிற நினைப்பு போகாது! அது இன்னும் ஆபத்தானது. (இங்கே ஹஸ்தாமலகர் சங்கரருக்கு சொன்னது வருகிறது) அதுதான் உண்மை. இருக்கிற இடத்திலேந்தே ஆத்மானுபவத்தை அடையப் பாரு.
வந்தவர் கேட்டார்: அப்படி நீங்க மட்டும் ஏன் மதுரையிலேந்து கிளம்பி திருவண்ணாமலை வந்தீங்க?
ரமணர் சிரித்துக்கொண்டே சொன்னார்: வந்தேந்தான். ஆனால் உன்னைப்போல நான் யாரையும் போய் கேட்டுக்கொண்டு இருக்கலையே!

--
ரமணருக்கு வந்தது போல ஒரு ஈர்ப்பு இருந்தால் யாரையும் யாரும் போய் கேட்டுக்கொண்டு இருக்க மாட்டார்கள். செய்துவிடுவார்கள். போகிறேன் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார்கள். அப்படி சொல்லிக்கொண்டு இருந்தால் அது ஒரு பொலம்பல்தான். அப்படி ஓடியும் போனால் அது ஒரு எஸ்கேபிஸம்தான்! குடும்பத்தில் தொல்லை தாங்காமல் ஓடிப்போனால் போகிற இடத்திலேயும் அவருக்கு வேறு ஏதோ தொல்லை வரத்தான் போகிறது. அதையும் சமாளிக்க முடியாவிட்டால் அங்கிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட வேண்டி இருக்கும்! குடும்ப பிரச்சினைகளுக்கு சன்னியாசம் தீர்வு இல்லை!




No comments: