Pages

Friday, April 24, 2020

#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 13




 
அப்பாடா என்ன வெயில் காயறது” என்றபடி வெள்ளி செம்பில் இருந்து பித்தளை டம்ளரில் தண்ணீரை ஊற்றி குடித்தார் தாத்தா.
 ஆமாம் தாத்தா ரொம்ப தான் காயறதுஅது சரி நீ ஏன் எப்பவும் அந்தப் பித்தளை டம்ளரில் மட்டுமே தண்ணி காபி எல்லாம் குடிக்கிற?
 ஆமாண்டா இது எனக்கு மட்டும் தான். வேற யாரும் இதை உபயோகிக்க மாட்டா
 இதே மாதிரிதான் பாட்டியும் வேற டம்ளர் வெச்சிருக்காளா?
 ஆமாம். சாதாரணமா அந்த காலத்திலிருந்து இப்படித்தான் ஒரு பழக்கம். அவா அவா டம்ளர் அவா அவா பஞ்சபாத்திரம், சாப்பிடற தட்டு, துண்டு, வேட்டி, மத்த துணிமணி  இப்படி எல்லாமே அவா அவா தனித்தனியா தான் வெச்சிருப்பாஅப்புறம்தான் எல்லாம் கலந்தாங் கட்டியா போயிடுத்து. நாங்கதான் இன்னும் இந்த பழக்கத்தை விடாமல் இருக்கோம்.
 இதுவும் நீ முன்ன சொன்ன அந்த எச்சில் சமாஜாரம் மாதிரிதானே தாத்தா
ஆமாண்டா, அதேதான்.
அது சரி, நீ வெளியூர் போறப்ப என்ன செய்வே தாத்தா?” என்று கேட்டாள் பேத்தி.
வெளியூர் போனா எல்லாம் என்னுத எடுத்துண்டு போவேன்மா. கூடவே என்னோட போர்வை என்னோட ஜமக்காளம் எல்லாம் எடுத்துண்டு போவேன்அதனாலதான் அந்த காலத்துல ஊர் விட்டு ஊர் போறதுன்னா நிறைய லக்கேஜ் எடுத்துட்டு போகணும். இப்பல்லாம் இந்த பழக்கம் எல்லாம் விட்டே போச்சு.
அது சரி தாத்தா யாரான விருந்தாளி வந்தால் என்ன பண்ணுவே?
சிரத்தை  இருக்கறவா அவளோடத கொண்டு வருவா. சில சமயம் வெள்ளில டம்ளர் வெச்சிருப்போம். அதுல ஜலம் காப்பி கொடுக்கலாம்.
வெள்ளிக்கு எச்சில் தோஷம் கெடயாதா தாத்தா?
ஊஹும். கெடயாது. அலம்பிட்டு திருப்பி யார் வேணா உபயோகிக்கலாம்.
அப்ப நீயும் வெள்ளி டம்ப்ளர் வெச்சுண்டு இருக்கலாமே தாத்தா?
வெச்சுண்டு இருக்கலாம். ஆனா இது ஆரம்ப காலத்துலேந்து பழகிப் போச்சு.
அப்பவே வெள்ளில வாங்கி இருக்கலாம் இல்லியா?
ம்ம்ம்ம் வாங்கி இருக்கலாம். அப்பல்லாம் ரொம்ப வறுமைடா. நானும் பாட்டியும் கிட்டத்தட்ட பத்து வருஷம் சரியான வருமானம் இல்லாம கஷ்டப்பட்டோம். வெள்ளி டம்ளருக்கு எங்க போக?
அப்ப இந்த வெள்ளி செம்பு?
அது எங்கப்பா கல்யாணத்தப்ப சீர் செஞ்சது” என்று இடை மறித்தாள் பாட்டி. “அப்பறம்தான் அவர்கிட்டேந்து ஒண்ணும் வாங்கிக்க மாட்டேன்னுட்டார் இவர். மானஸ்தர்!” 
அதெல்லாம் சும்மா! அவரே கஷ்டப்பட்டுண்டு இருந்தார். கடன வாங்கி அதெல்லாம் வாங்கிக்கொடுக்க தயாரா இருந்தார். நாதான் கூடவே கூடாதுன்னுட்டேன்.
சரி, இப்படி பித்தள வெள்ளி மாதிரி வேற எதாவது?
தண்ணி வெச்சுக்க தாம்ரபாத்ரம் வெண்கலம் இதெல்லாம் வெச்சுக்கலாம். ஏன் தங்கத்துல கூட வெச்சுக்கலாம்
தங்கமா?
ஆமாண்டி. தங்கம்தான். அந்த காலத்துல ராஜாக்கள் வெச்சுண்டு இருப்பா, கேக்கவே வேண்டிதில்ல. பெரிய பணக்காரா சிலர் வெச்சுண்டு இருப்பா
எதுக்குத்தாத்தா வெள்ளி தங்கம் எல்லாம்?
பாட்டி சொன்னாள்: சுத்தம் பண்ணறது சுலபம்டா. தாம்ரம் வெண்கலம் பித்தளை எல்லாம் களிம்பு ஏறும். அத தேய்க்கறதுக்குள்ள…. தங்கம் வெல அதிகம். இந்த காலத்துல யாராலயும் முடியாது. வெள்ளி வசதிப்பட்டவா பலர் வெச்சுக்கறா. தாத்தா கூட வெளியூர் போனா எடுத்துண்டு போக சின்ன வெள்ளி டம்ளர் வெச்சுண்டு இருக்காளே!
ஆம்ம்மா, அத எடுத்துண்டு போனா அத காபந்து பண்ணனும். அதுலேயே மனசு இருக்கும். அதுக்கு அத கொண்டு போகாமலே இருக்கலாம்.
பின்ன எதுக்கு அத உபயோகப்படுத்தணும்?
சித்ரா சொன்னார்: வெள்ளி தங்கம் எல்லாம் ஹெவி மெட்டல்டி. அதுல பாக்டீரியா மாதிரி எதுவும் உசிரோட இருக்க முடியாது. செத்துப்போயிடும்.
அப்படியாம்மா?
அப்பா நெட்ல அன்னிக்கு பாத்தேன் ரெண்டரை ஆயிரத்துக்கு தங்கம் ப்ளேட் பண்ண தட்டு, டம்ப்ளர் எல்லாம் ஒரு செட்டா இருக்கு. உனக்கு அத வாங்கவா?” என்றார் கணேசன்.
பாட்டியின் கண்கள் ஆசையில் மின்னின
எதுக்குடா? தோட்டத்துல வாழமரம் இருக்கறப்ப, இலை கிடைக்கறப்ப தங்கம் எதுக்குடா”என்றார் சாஸ்திரிகள்.
நீ சும்மா இரு தாத்தா! நா பெரியவனான அப்பறம் வேலைக்கு போய் பணம் சம்பாதிச்சு, உனக்கும் பாட்டிக்கும் அத வாங்கி கொடுக்கறேன். சரியா?’ என்றான் பேரன்.
என் கண்ணே’ என்று அணைத்துக்கொண்டாள் பாட்டி!

- நிறைந்தது-


No comments: