Pages

Monday, April 20, 2020

#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 9





தாத்தா தோட்டத்தில் செடிகளை கவனித்துக் கொண்டிருந்தார். வாசல் வழியே போன ஒரு ஆசாமி கர்ர்ர் என்று காறி ரோடு ஓரத்தில் துப்பிக் கொண்டே சென்றார். எதிரே வந்த போலீஸ்காரர் அவரை பிடித்து விசாரித்தார். மளிகை வாங்க போவதாக சொன்ன அவரிடம் 'ஏன் காரித்துப்புறே?' என்று கேட்டார். 'ஆமாங்க தப்புதான். மன்னிச்சுக்குங்க. பழக்கம் ஆகிடுச்சு' என்றார் அவர். 'ஜாக்கிரதை' என்று சொல்லி அனுப்பினார் போலீஸ்காரர்.
அவர் காரித்துப்பிய போதே தாத்தாவின் முகம் அஷ்ட கோணலாக ஆனதை கவனித்தான் பேரன்.
என்ன தாத்தா என்ன விஷயம்?
இல்லடா சின்ன வயசுல நல்ல பழக்கம் சொல்லிக் கொடுக்கணும் அப்படிங்கறது இதுக்குதான். வயசான்னா மாத்திக்க முடியாது. எப்பவுமே ரோடு ஓரத்தில் ஒன்னுக்கு ரெண்டுக்கு இருக்கிறதோ காறி துப்பறதோ குப்பை போடுறதோ... இதெல்லாம் தப்புன்னு சின்ன வயசிலேயே தெரிஞ்சாத்தானே வயசான பிறகு சரியாக இருப்போம். இந்த ஆசாமிக்கு யாரும் சரியாக சொல்லிக் கொடுக்கலை.
ஆமாம் தாத்தா சின்ன வயசுல சொல்லி கொடுத்தா தான் நல்லதுன்னு எங்க டீச்சர் சொல்லி இருக்கா. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா அப்படின்னு ஒரு பாட்டி சொல்லி இருக்களாமே!
கரெக்டுதான்டா! சின்ன வயசுதான் எல்லாத்தையும் கத்துக்க சரியா இருக்கறது. அதுதான் எப்போதும் நல்லது.
ஏன் தாத்தா, வீட்ல இருக்குறப்போ பாக்கலாம் கத்துக் கொடுக்கலாம். ஆனா வெளியே ரோட்டுல போறப்போ பசங்க எப்படி இருக்கா எப்படி நடந்துக்கிறான்னு எப்படி தெரியும்? அதை எப்படி சரி பண்ண முடியும்?
நல்ல கேள்விடா! நாங்க எல்லாம் சின்ன பசங்களா இருந்தப்போ ரோட்டில இந்த மாதிரி ஏதாவது செஞ்சா அக்கம்பக்கம் யார் எந்த பெரியவர் இருந்தாலும் கண்டிப்பார். அவர் என்ன வேலை பார்க்கிறார் என்ன ஜாதி அப்படி எல்லாம் ஒண்ணும் விஷயமே கிடையாது. அதனால எல்லாரும் சரியா நடந்துக்க ஆரம்பிச்சா.
அப்ப ஏன் தாத்தா அந்த நல்ல பழக்கம் விட்டு போச்சு?
விட்டுப்போச்சு! என்னடா செய்யறது? எல்லாம் காலத்தின் கோலம். காலப்போக்குல பலருக்கும் மட்டு மரியாதை இல்லாம போச்சு. தப்பா பல விஷயங்கள் அரசியல்வாதிங்க கத்துக்கொடுக்கப் போய் சமூகத்துல ஒழுங்கீனம் அதிகம் ஆயிடுத்து. இந்த மாதிரி ஏன்டா இப்படி தப்பு பண்றன்னு கேட்டா 'ஏ பெருசு உனக்கென்ன? உன் வேலைய பாத்துட்டு போ' அப்படின்னு சின்ன பசங்க சொல்ற அளவுக்கு வந்துட்டது. அக்கம் பக்கத்துல இருக்கற பெரியவங்களும் 'சார், எதுக்கு இவங்ககிட்ட எதுவும் வெச்சுக்கறீங்க? பிரச்சினைதான் வரும். ஒதுங்கி போயிடுங்க'ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டா. அந்த மாதிரி மாறின பிறகு என்ன மாதிரி பெரியவாளுக்கு எல்லாம் 'பேசாம வாய மூடிகிட்டு போலாம். எப்படியோ போகட்டும். நாம என்ன செய்ய முடியும்?' அப்படின்னு தோணிப் போச்சு. மரியாதை காப்பாத்திக்கணும் அப்படினா யாரையும் எதுவும் சொல்லக்கூடாது அப்படின்னு தோணி போச்சு.
அப்படியா தாத்தா? ஆனா நீ மட்டும் எனக்கு மட்டுமாவது எப்படி நடந்துக்கணும்ன்னு சொல்லி தரியா?
'ஆகட்டும்டா செல்லமே! என் பேரன் எவ்வளவு சமத்து! ' என்று மகிழ்ந்தார் சாஸ்திரிகள்.

No comments: