Pages

Saturday, April 11, 2020

கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 3




சயின்ஸ் டீச்சர் "அம்மா! அப்பாடா!" என்று சொல்லியபடியே கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தார். வாசலில் இருந்த குழாயைத் திறந்து கை கால்களை அலம்பிக்கொண்டு பிறகு காய்கறிகள் வாங்கி வந்த கூடையை அப்படியே குழாய் தண்ணீரில் அலம்பி தண்ணீரை சொட்ட விட்டுவிட்டு உள்ளே கொண்டு வந்தார்.
கொரோனா நடவடிக்கை எல்லாம் பலமா இருக்கே!” என்றார் கணேசன்.
ஆமான்னா. பின்ன காய்கறிகள் எல்லாம் யார் எங்கேருந்து கொண்டு வந்தது எல்லாம் ஒன்னும் தெரியாதே? நேத்து வீடியோ கூட பார்த்தேன் ஒரு ஆசாமி சாக்கடைத் தண்ணீர்ல காய்கறி எல்லாம் கழுவி வண்டியில் எடுத்து வைக்கிறத. அதனால எதுக்கு ரிஸ்க்?” என்றாள் சயின்ஸ் டீச்சர் சித்ரா.
இது என்னடா புதுசு? அந்த காலத்திலே ..”என்று ஆரம்பித்தாள் கோமுப் பாட்டி. உடனடியாக பேரன் அங்கே ஆஜராகி விட்டான்.
ஆமாம் அந்த காலத்துல என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டான் பேரன்.
அந்த காலத்துல தோட்டத்துல கொஞ்சம் காய்கறி செடி எல்லாம் போட்டு இருப்போம். கீரைப்பாத்தி போட்டு இருப்போம். அதிலேந்து எடுத்து சமைப்போம். போதாததுக்கு தெருவில் வாங்குவோம்.

தெருவில வாங்கினா அப்படியே உள்ள கொண்டு வருவியா பாட்டி?

நிச்சயமா இல்லடா தெருவில வாங்கினா அந்த கூடையோட வாய்க்கா தண்ணில அலம்பித்தான் உள்ள கொண்டு வருவோம்.

வாய்க்கா தண்ணி அசுத்தமா இருக்காதா பாட்டி?

இல்லடா கண்ணா அது ஒடிண்டே இருக்கும். அதிலே வேறேதும் அசுத்தமாக மாட்டா. ரெண்டுக்கு போயிட்டு கால் அலம்பரது இதெல்லாம் செய்ய மாட்டாங்க. ஊரே அப்படித்தான்.

சரி வாசல்ல வேற என்ன வாங்குவே பாட்டி? பாலு?

சிலபேர் வீட்டுல மாடு வைத்திருந்து இருப்பா அப்படி மாடு வச்சுக்காதவா மட்டும்தான் வாசல்ல பால் நெய் வெண்ணை வாங்கறது உண்டு. வீட்டில் மாடு இருந்தா காத்தால கோனான் வந்து கறந்து கொடுத்துவிட்டு போயிடுவார்.

மத்ததெல்லாம் எப்படி பாட்டி? கடைக்கு போய் சோப்பு சீப்பு வாங்கிக்கொண்டு வந்தா?

அதெல்லாம் ப்ரோக்‌ஷணம் பண்ணி உள்ள கொண்டு வந்துவிடுவோம்.

அதல்லாம் ஈரமா இல்லடா அதனால அதுல பிரச்சனை இருக்காது” என்றாள் அம்மா.
ஓஹோ அப்படியும் இருக்கா? ஏன் ஈரத்தை பத்தி என்ன விஷயம்?

பாக்டீரியாவோ வைரஸோ கொஞ்சமாவது ஈரப்பதம் இருந்தால் தான் பிழைக்கும். இல்லைனா ஒரு 20 நிமிஷம் போல காஞ்சி இருந்தா அது செத்துப் போய்விடும்” என்றாள் சயின்ஸ் டீச்சர்.

நிச்சயமாவா அம்மா?

நிச்சயம்ன்னா என்னடா? முக்காலே மூணு வீசம் அப்படித்தான்” என்றாள் அம்மா.

எல்லாம் சரிதான் பாட்டி எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இப்போ..

என்னடா?

தெருவில வண்டில உப்பு வித்துண்டு போவானாமே அதுலயும் தண்ணி விட்டு தான் கொண்டு வருவியா உள்ள?

எடு அந்த தொடப்பகட்டய …. என்று பாட்டி ஆரம்பிக்கும் போது மாடிக்கு சிட்டாக பறந்துவிட்டான் பேரன்.

No comments: