" முடியல!" என்றபடியே வாசலில் இருந்து தண்ணீர் குடத்தை உள்ளே கொண்டுவந்து வைத்தார் கணேசன்.
"என்னடா என்ன ஆச்சு?" என்றார் வெங்கடராம சாஸ்திரிகள்
"முடியல. ரிடயர் ஆயிட்டு என்னோட வாப்பான்னு சொன்னப்ப நீ கிணறு இல்லாட்டா வர மாட்டேன்னு அடம் பிடிச்சே. நீ சொன்னதுக்காக ஊருக்கு வெளியே இங்கே வீடு பார்த்தேன். இப்போ தினசரி குடிக்க தண்ணிக்காக வாசல்ல போய் பிடிச்சிட்டு வர வேண்டி இருக்கு. அது எப்போ வருமோ வராதோ எல்லாம் ஒன்னும் தெரியறதே இல்லை. தண்ணி பிரஷரும் இல்லை. "
"ஏண்டா அலுத்துக்கறே?" என்றாள் கோமு பாட்டி. "அந்த காலத்துல என் தோப்பனார் காவிரில ஸ்னானம் பண்ணிட்டு பூஜைக்கும் ஆத்துக்கும் ரெண்டு குடம் தண்ணி எடுத்து வருவார்" என்றாள்.
"ஸ்னானம்ன்னா என்ன பாட்டி?" என்று கேட்டான் பேரன்.
"குளிக்கிறதுடா. அதாவது தலைக்கு தண்ணி படறா மாதிரி குளிக்கிறது" என்றாள்.
"நீ செய்யற காக்கா குளியல் இல்ல" என்று கேலி செய்தாள் பேத்தி.
"ஏன் வீட்டில குளிச்சா என்ன பாட்டி?" என்றான் பேரன்.
"அது அவ்வளவு ஆச்சாரம் இல்லடா" என்றார் வெங்கடேசன்.
"ஏன் தாத்தா?" என்று கேட்டான் பேரன்.
"தோ பாரு, ஆத்துல ஜலம் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்.
அதனால அது எப்பவும் சுத்தமா புதுசா இருக்கும்."
"சரிதான்! 200 மீட்டர் ஜலம் ஓடித்துன்னா அதுல ஆக்ஸிஜன் கலந்து சுத்தமாயிடும்" என்றாள் அம்மா.
"அப்படினா நீ கெணத்துல குளிக்கறியே, ஏன் தாத்தா?" என்றான் பேரன்.
"என்னடா செய்யறது! இப்பல்லாம் ஆறுமில்ல; இருந்தா அதுல தண்ணியும் இல்லை. அதனால கெணத்துல குளிக்கறேன்" என்றார் தாத்தா.
"கொழால குளிச்சா என்ன?"
"இல்லடா கொழா தண்ணி புதுசு இல்ல."
"அப்படின்னா எது நல்லது கெட்டது என்று சொல்லேன்" என்று விவரம் கேட்டான் பேரன்.
"சரி கேட்டுக்கோ! முதல்ல ஆத்து தண்ணி. அது கிடைக்கலைன்னா வாய்க்கால் தண்ணி. இப்படி ஒரு ஓடற தண்ணிதான் முதல்ல நல்லது. ரெண்டாவது. ஓடாம நிக்கிற தண்ணி இருக்கிற பெரிய எடம்."
" ஏரி மாதிரியா தாத்தா?"
"கன்னுக்குட்டி! சரியா சொல்லிட்டியே!" என்றார் தாத்தா.
" அப்புறம்?"
"அப்பறமா பெரிய குளம், குட்டை வீட்டுக் கெணறு அப்படின்னு போகும். ஆனா இப்போ எல்லாரும் வீட்டு மேல ஒரு டாங்க் கட்டி வெச்சு அதுல தண்ணி ஏத்தறா."
"சரி தாத்தா அந்த தண்ணில என்ன தப்பு?"
"அதுவா அது பழைய தண்ணி."
"இல்லையே தாத்தா! தெனமும் மோட்டார் போடராளே?"
"ஆமா மோட்டார் போடறாதான். ஆனா மேல என்ன டேங்க்ல தண்ணி காலியா போயிட்டுதான் போடறாளா? காலியா போகாமலே மேல மேல தண்ணி ஏத்தினா அப்போ அது ப்ரஷ்ஷா இல்லியே? கலந்தது தானே?" என்றார் தாத்தா.
"ஏன் தாத்தா பழைய தண்ணி யூஸ் பண்ண கூடாதா?" என்று கேட்டான் பேரன்.
"வாச கூட தெளிக்க மாட்டா!" என்றாள் கோமுப் பாட்டி.
"ஓஹோ அப்படியா? ஏன் இந்த பழைய தண்ணி யூஸ் பண்ணக் கூடாது?" என்று விடாப்பிடியாக கேட்டான் பேரன்.
" பழைய தண்ணினா அதுல ஏதாவது பாக்டீரியா எல்லாம் வளர இடம் உண்டுடா" என்றாள் சயன்ஸ் டீச்சரான அம்மா.
"ஓஹோ அப்படியா அம்மா? ஆனா கங்கை தண்ணின்னு செப்பு கொடத்த உடைச்சு பழைய தண்ணி கூட யூஸ் பண்ணறாளே?" என்று கேட்டான் பேரன்.
" உனக்கு பதில் சொல்லி மாளாது டா!" என்றாள் பாட்டி.
அம்மா சிரித்தாள். "இல்லைடா கங்கைத் தண்ணியில பாக்டீரியோபாஜ் அப்படின்னு ஒன்னு இருக்கு அது அதுல இருக்கிற பாக்டீரியா எல்லாம் கொன்னுடும். அப்படின்னு கூகுள் பிளஸ்ல ரொம்ப நாள் முன்னாடி ஒரு சயின்டிஸ்ட் ரஜினி ராவ் எழுதினாங்க" என்றாள் சயின்ஸ் டீச்சர்.
" சரி தாத்தா நீ கெணத்து தண்ணி கொண்டு வரயே, அது மட்டும் எப்படி சுத்தமா?" என்று கேட்டான் பேரன்.
"ஆமாண்டா கிணத்து தண்ணி கொண்டுவரத்தான் கொண்டு வரேன்; அதுலதான் குளிக்கிறேன். அது எப்பவும் பூமி சம்பந்தத்துல இருக்கோன்னோ? நீயும் குளிச்சு பாரு. அப்போ வித்தியாசம் தெரியும் - எவ்வளோ ப்ரஷ்ஷா இருக்குன்னு" என்றார் தாத்தா.
பாட்டி இடைமறித்தார் "கிணத்து தண்ணியா இருந்தாலும் பூஜைக்கு பயன்படுத்த தண்ணில பச்சைக்கற்பூரம் போட்டுடுவார். அது தண்ணிய சுத்தப்படுத்தும்" என்றாள் பாட்டி.
" ஓ அதுக்கு தான் பெருமாள் கோயில்ல கொடுக்கிற தண்ணில பச்சை கற்பூரம் துளசி எல்லாம் போடறாளா?" என்றான் பேரன்.
"கரெக்டா சொல்லிட்டே டா கண்ணா! உன் சமத்து யாருக்கு வரும்?" என்று சிலாகித்தார் பாட்டி.
No comments:
Post a Comment